×

நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி மோசடி வழக்கு முக்கிய குற்றவாளி அழகப்பனை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி நடிகை கவுதமி பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள எனது சொத்துகளை விற்பனை செய்ய பவர் ஏஜென்டாக அழகப்பன் என்பவரை நியமித்தேன். ஆனால், அழகப்பன் தனது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மகள் ஆர்த்தி மற்றும் உறவினர்கள் பாஸ்கர், ரமேஷ் சங்கர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 10.63 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், எனது வங்கி கணக்கில் ரூ.58 லட்சம் மட்டும் வரவு வைத்தார்.

மீதமுள்ள பணத்தை அவர் தனது உறவினர்கள் மற்றும் மகன், மகள் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றி ஏமாற்றி விட்டார். அதேபோல், கடந்த 10.2.2021ல் ராமநாதபுரத்தில் உள்ள 8.23 ஏக்கர் நிலத்தை அழகப்பன் தனது மகன் சிவா அழகப்பன், மகள் ஆர்த்தி அழகப்பன் பெயரில் பதிவு செய்து கடந்த 20.10.2015ல் விற்பனை ஆவணத்தை மாற்றி எனது சொத்துகளை ஏமாற்றி பறித்துக் கொண்டார். அந்த வகையில் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் பணத்தை ஏமாற்றிய அழகப்பன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது சொத்தையும், அசல் ஆவணத்தையும் பணத்தையும் மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை கவுதமி புகாரின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், நடிகை கவுதமி அளித்த புகாரின் மீது திருவண்ணாமலை மாவட்ட போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சல் அழகப்பனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை எடுத்து வருவதாக கூறி சென்றவர்கள் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டனர்.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 6 முறை அழகப்பனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு சம்மனுக்கும் அவர் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் உள்ள அழகப்பனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சொத்து பத்திரங்கள் பல சிக்கியதாக கூறப்படுகிறது. அதேநேரம் கோட்டையூரில் உள்ள பங்களா வீட்டில் உள்ள 11 அறைகளையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

இந்நிலையில் நடிகை கவுதமிக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த அழகப்பன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மோசடிக்கு உடந்தையாக உள்ளவர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 தனிப்படைகளும் பல்வேறு கோணங்களில் அழகப்பனை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேநேரம், அழகப்பன் மகன் சிவா லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் லண்டனுக்கு தப்பி சென்று இருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகிக்கின்றனர். அழகப்பன் தொடர்பான விவரங்களை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வெளிநாட்டிற்கு தப்பி சென்றாரா என்ற கோணத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

The post நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி மோசடி வழக்கு முக்கிய குற்றவாளி அழகப்பனை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Gauthami ,Alagappan ,Chennai ,Chennai Police Commissioner ,Gautami ,Dinakaran ,
× RELATED இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!!